Tuesday 7 April 2015

சேலத்தில் 60 கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற கல்வி கண்காட்சி, ஆலோசனை முகாம் நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை நடக்கிறது.

கல்வி கண்காட்சி

சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் கல்வி ஆலோசனைத் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் ஈரோடு மற்றும் சேலத்தில் ஆண்டுதோறும் குமாரபாளையம் ஸ்ரீ ரெங்கசுவாமி கல்வி அறக்கட்டளையின் சார்பில் இலவசமாக கல்வி கண்காட்சி மற்றும் ஆலோசனை முகாம் கடந்த 12 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு வெற்றிகரமாக 13-வது ஆண்டாக இந்த கண்காட்சி சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் கண்காட்சியை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.

வளர்ச்சியை தடுக்க முடியாது

இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினரான மதுரை தியாகராயர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான கு.ஞானசம்பந்தம் கலந்து கொண்டு பேசுகையில், ‘பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களை காட்டிலும் அவர்களது பெற்றோர்களுடைய முகம்தான் அதிக குழப்பமாக இருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும், என்பதற்காகத்தான் இந்த குழப்பம். முன்னர் மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். இப்போது மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்கிறார்கள்.

இப்போதுள்ள மாணவர்களை ஒரு திருக்குறளை ஒப்பிக்க சொன்னால் ஓடிவிடுவார்கள். படிக்கும்போதே அடுத்து நான் என்னவாக ஆவேன் என்பதை முடிவு செய்ய வேண்டும். அப்துல்கலாமுக்கு விமானப்படையில் வேலை கிடைக்கவில்லை. ஆனால் முப்படையினரும் மரியாதை செலுத்தும் குடியரசுத்தலைவராக உயர்ந்தார். நமது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தால் மற்றவர்களுக்கு தீமை செய்ய நேரமிருக்காது. நீங்கள் என்னவாக ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் உங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது’ என்றார்.

நேர்மறை சிந்தனை

சென்னை இன்போசிஸ் நிறுவன மனித வளபிரிவு வட்டார தலைவர் மற்றும் மனித வணிகமேலாளர் சுஜித்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாணவர்களுக்கு படிக்கும் பாடத்தில் தெளிவு மிக, மிக முக்கியமானதாகும். மாணவர்கள் மதிப்பெண் பெறுவது அவர்கள் திறமை. உங்கள் குழந்தைகள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றாலும் அவர்களை திட்டாதீர்கள். வாழ்க்கை என்பது மராத்தான் ஓட்டம் மாதிரி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்த 3 நாள் கண்காட்சியில் கடந்த 2 நாட்களாக சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, சென்னை, கரூர், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த 3 நாள் கண்காட்சியில் பங்கேற்கும் 60-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு, பாடப் பிரிவுகள் குறித்து விளக்கங்களும், அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்த விளக்கமும், கல்வியாளர்களை கொண்டு எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment